ஞானஸ்நானம் Baptism
ஞானஸ்நானம் Baptism 

"இவர் (இயேசுகிறிஸ்து) வெளிப்படுவதற்குமுன்னே மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான்" என்று வேதாகமம் சொல்லுகிறது (அப்போஸ்தலர் 13:24)

ஞானஸ்நானம் கொடுக்கும்படி, தான் தேவனிடத்திலிருந்து நேரடியாகக் கட்டளை பெற்றதாக யோவான்ஸ்நானன் கூறுகிறான் (யோவான் 1:33).

இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு முன்பே யோவான் அவரை அறிந்து கொண்டபோதிலும்,(மாற்கு 1:9-11) ஞானஸ்நானத்துக்குப் பிறகே இயேசு தேவனுடைய சொந்தக்குமாரன் என்பதை முழுமையாக உணர்ந்தான். பரிசுத்த ஆவியானவர் புறா வடிவத்தில் இயேசுவின் மீது வந்து அமர்ந்ததைப் பார்த்த போது தான் அதை அறிந்தான் (மாற்கு 1:9-11; லூக்கா 3:21-22 ). ஆவியானவர் யார் மீது இறங்குவாரோ அவரே பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுப்பவர் என்று தேவன் யோவானிடம் சொல்லியிருந்தார் (மாற்கு 1:8 ). ஆக யோவான் இப்பொழுது முழு நிச்சயத்துடன், "அந்தப் படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்று யோவான் கூற முடிந்தது (யோவான்1 :34).


யோவான்ஸ்நானன் கொடுத்த ஞானஸ்நானம்:

யோவான்ஸ்நானன் கிறிஸ்துவுக்காக ஜனத்தை ஆயத்தப்படுத்தும்படி அவருக்கு முன் வந்த ஒரு முன்னோடி மட்டுமே. மனந்திரும்புதலைக் குறித்துப் பிரசங்கிப்பதும் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு  மனந்திரும்பினவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதும், அவர்களைப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் அபிஷேகம்பண்ணப்போகிறவராகிய கிறிஸ்துவை அவர்களுக்குப் பிரசங்கிப்பதுமே தேவனுடைய பிரதான ஊழியமாய் இருந்தது (மத்தேயு. 3:6,11). அவன் தேவாலயத்திற்கடுத்த விஷயங்களிலும், அப்போதிருந்த ஆசாரியத்துவத்திலும் அவர்களுடைய உபதேசங்களிலும் தலையிடாமல், பாவத்தின் கொடூரத்தையும் அதன் சம்பளத்தையும் குறித்தே வலியுறுத்தி எச்சரித்தான். கிறிஸ்துவின் மேன்மையான 

ஜீவியத்தோடு ஒப்பிடுகையில் தன் ஜீவியம் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்பதையும், தான் கொடுக்கும் ஞானஸ்நானம் 'மனந்திரும்புதல்' என்னும் கிறிஸ்துவின் ஆரம்ப உபதேசம் ஒன்றுடன் மட்டுமே சம்பந்தமுள்ளதாயிருக்கிறது என்பதையும் இதன்மூலம் குணப்பட்டவர்களுக்கு அவன் தெளிவாக்கினான் (மத்தேயு. 3:11).

பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததில்லை..

யோவான்ஸ்நானன் ஒருக்காலும் பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததில்லை. அதுமட்டுமல்ல, வயதுவந்தவர்களுங்கூட பாவத்தின்மேல் நாட்டமுள்ளவர்களாய் இருப்பதாக அவன் கண்டால், அவர்களுக்கு அவன் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. தேவனை விட்டும் தேவனுடைய வசனத்தை விட்டும் வழுவிப்போய் தங்கள் தரத்திலே குறைந்துபோன பரிசேயரையும் சதுசேயரையும் அவன் கண்டபோது அவர்களை 'விரியன் பாம்புக்குட்டிகளே' என்று அழைத்து, "மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்” எனக் கட்டளையிட்டான் (மத்தேயு. 3:7,8). ஞானஸ்நானத்தைத் தன்னுடைய ஊழியத்தை விரிவுபடுத்துவதற்கோ அல்லது தன்னைப் பின்பற்றுகிறவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ அவன் பயன்படுத்தவில்லை. தன்மூலம் குணப்பட்டவர்களுக்கு, 

தன்னுடைய ஞானஸ்நானமானது, நரகத்திலிருந்தோ அல்லது பாவ ஜீவியத்தைத் தொடருவதிலிருந்தோ தப்பித்துக்கொள்வதற்கு ஒரு நிச்சயமான வழி என்று அவன் உறுதியளிக்கவில்லை.

யோவான்ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்த விதம்:

யோவான்ஸ்நானன் ஜனங்களைத் தண்ணீருக்குள் அமிழ்த்தாமல் தலையிலோ அல்லது நெற்றியிலோ தண்ணீரைத் தெளித்ததாகக் குழந்தை ஞானஸ்நானத்தை ஆதரிக்கிறவர்கள் ஒரு பாரம்பரியமான அபிப்பிராயங்கொண்டிருக்கிறார்கள். இக்கருத்தானது வேத வாக்கியங்களுக்கும், 

தண்ணீர் மட்டத்தின் கீழ் அமிழ்த்துவது என்று அர்த்தங்கொள்ளும் 'பாப்டைஸோ' என்னும் பதத்திற்கும் முரண்பாடானதாக இருக்கிறது. அன்றியும் அவன் ஒரு குவளையிலிருந்தோ அல்லது ஒரு பாத்திரத்திலிருந்தோ தண்ணீரை எடுத்துத் தெளிக்கவில்லை என்பது வெளிப்படையாகும். அவன் யோர்தான் நதியில் அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்துவந்தான். 

சரீரத்தை முழுவதுமாய் நீருக்குள் அமிழ்த்துவதற்குப் போதிய ஆழமில்லாத இடங்களை அவன் தவிர்த்து நதியின் ஆழமான பகுதிகளைத் தெரிந்துகொண்டான். சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்த படியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங் கொடுத்துவந்தான் என நாம் வாசிக்கிறோம் (யோவான் 3:23)

இயேசுகிறிஸ்து பெற்றுக்கொண்ட ஞானஸ்நானம்:

இயேசுகிறிஸ்து பாவமில்லாதவர்; தேவனுடைய மாசற்ற குமாரன். அவர் மனஸ்தாபப்படுவதற்கு அல்லது மனந்திரும் புவதற்கு ஏதுவாய் அவரிடம் எதுவுமில்லை. அப்படியாயின், அவர் ஏன் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்? அவருடைய சொந்த வார்த்தைகளின்படி, அது தேவனுடைய நீதியை நிறைவேற்றுவதற்காகும் "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். "மத்தேயு 3:15

நியாயப்பிரமாணத்தின் சாபத்தினின்று நம்மை விடுவிக்க கிறிஸ்து நியாயப்பிரமாணம் யாவையும் முழுவதுமாய் நிறைவேற்ற வேண்டியதாயிற்று (கலாத்தியர். 4:4,5). அதுமாத்திரமல்ல. அவரைப் பின்பற்றுகிறவர்களாகிய 'நமக்கு (அவர்) உண்டுபண்ணின' 'புதிதும் ஜீவனுமான மார்க்கத்தில்' நாம் அவரைப் பின்பற்றும்படி கருத்தாய் நமக்கு ஒரு முன்மாதிரியை வைக்க வேண்டியதாயிருந்தது (எபிரேயர் 10:19), "அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்" (யோவான் 17:19) என்றும், "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன் " (யோவான் 13:15)

 என்றும் அவர் சொல்லக் கூடியவராயிருந்தார். "இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப் போனார்.

God bless you

போதகர் P.பால் எபநேசர்

ஜெப  உதவிக்கு 9444193444